மத்திய தரைக்கடல் பகுதி கொஞ்சம் ஆபத்தான கடல் பகுதி. ஒருபக்கம் சிரியா, லெபனான், பாலஸ்தீனம், ஈராக் போன்ற போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட நாடுகள், இன்னொருபுறம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் சூழ்ந்திருப்பதால் இந்த நாடுகளில் வாழ வழியற்றோர் ஐரோப்பிய நாடுகளைத் தஞ்சமடைவதே வழக்கம். ஆனால் பெரும்பாலான நாடுகள் ஒரு அளவுக்குமேல் அகதிகளைத் தவிர்ப்பதே வழக்கம்.
அதனால் திருட்டுத்தனமாக கடல் மார்க்கத்தில் ஐரோப்பாவுக்குள் நுழைவோர் இந்த மத்திய தரைக்கடல் பகுதி வழியாக நுழையமுற்படுவர். அப்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150 பேர் துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையக் கிளம்பியுள்ளனர். இவர்களது படகு பிப்ரவரி 26-ஆம் தேதி இத்தாலி அருகே பாறையில் மோதிக் கவிழ்ந்தது. இதில் 81 பேர் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 59 பேர் பலியாகினர். அதில் 29 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். சமீபமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாக நலிவடைந்துள்ளதால், பலரும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடல்பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் 17,000 அகதிகள் வரை மூழ்கி இறந்துள்ளனராம்! மனசே கனத்துப் போகுது!
துருக்கி நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகள் முடிந்து, அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டுவருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு நிதி திரட்டுவதற்காக துருக்கியின் உள்ளூர் அணிகளான பெசிக்டாஸ்லி அன்டலியாஸ் அணிகள் பிப்ரவரி 26 அன்று மோதின. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, நிவாரண நிதியாக தங்களால் முடிந்தளவு கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி ரசிகர்களிடம் கோரப்பட்டது. மிகச்சரியாக துருக்கியில் பூகம்பம் ஏற்பட்ட அதிகாலை 4.17 மணிக்கு இடையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தாங்கள் வாங்கிவந்திருந்த பொம்மைகளை மைதானத்தில் வீச, மாபெரும் பொம்மை மழை பொழிந்தது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொம்மைகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நல்ல யோசனைதான்!
நூற்றியிருபது ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சூடான பிப்ரவரி மாதத்தைப் பார்த்திருக்கிறது இந்தியா. வசந்தகாலம் என அழைக்கப்படும் இக் காலகட்டத்தில் மிதமான வெப்பநிலையே நிலவும். மாறாக, 1901-ல் நிலவிய சூடான வெப்பநிலையை 2023 முறியடித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகி யிருக்கிறது. வடக்கு, வட மேற்கு, மத்திய இந்தியா வில் வரும் மார்ச் முதல் மே வரை கடுமையான வெப் பம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்குப் பகுதியைப் பற்றிக் குறிப் பிடாததால் அங்கே வெப் பம் குறைவாக இருக்கு மென நினைத்துவிடக் கூடாது. ஒப்பீட்டு ரீதியில் சில டிகிரி குறைவாக இருக்கலாம். கடந்த வருடமே வெப்ப அலை மற்றும் அதுதொடர்பான மரணங்கள் இருந்த நிலையில், இந்த வருடமும் அதுபோன்ற நிகழ்வுகள் இருக்க லாம் என்கிறார்கள். கோடை வெயிலின் பிரதான பிரச்சனையான, தண்ணீர்த் தட்டுப்பாட்டை உத்தே சித்து தேவையான முன்னேற்பாடுகளுக்கு இப்போ தே மாநிலங்கள் திட்டமிடுவது நல்லது. அப்ப சம்மர்ல அனல் பறக்கும்…
நீங்கள் சென்னைவாசியா? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான். சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக தினமும் 170 மில்லியன் லிட்டர் நீர் வீராணம் ஏரியிலிருந்து வருகிறது. இந்த வீராணம் ஏரியில் இந்திய, அமெரிக்க, சௌதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆய்வொன்றை நடத்தின. அதில் வீராணம் ஏரியின் நீரில் ஈயம், குரோமியம், நிக்கல், துத்தநாகம், ஆர்சனிக் உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் அதிகமாகக் காணப்படுவதாக எச்சரித்துள்ளனர். வீராணம் ஏரி நீர் காவேரியிலிருந்து வருகிறது. காவேரி வரும் வழியில் தோல், பேட்டரி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. தவிரவும் ஒவ்வொரு ஊரின் சாக்கடைக் கழிவுகளும் ஆற்றில்தான் விடப்படுகின்றன. நவீன விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளின் பங்கு அதிகம் என்பதால் ஆற்றோர விவசாயத்தில் பூச்சிக்கொல்லி, உரங்களின் தாக்கமும் இந்த நீரைத்தான் வந்தடைகின்றன. வீராணம் ஏரி நீரின் தரம் மேம்படாவிட்டால் அதைப் பருகுபவர்களுக்குத்தான் ஆபத்து என்கிறது இந்த ஆய்வு. அதிகாரிகள் விழித்து, அதைத் தடுக்கிறதுக்குள்ள ஒரு மாமாங்கம் கடந்துடும்! நீரும் விஷமானா என்னதான் பண்றது!
-நாடோடி